மக்கள் மத்தியில் நாமல் ராஜபக்ஷவிற்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டு அஞ்சும் அரசாங்கம், பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் அவரைச் சிறையிலடைக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், காரல்டன் ரக்பி போட்டிகளுக்காக கிரிஷ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில் ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதே 70 மில்லியன் ரூபாய் தொடர்பில் 'லஞ்சம்' என்ற புதிய கோணத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தற்போது புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இது சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கும் முரணான, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, விசாரணை நிறுவனங்கள் நீதியை நிலைநாட்டும் கருவிகளாகச் செயல்படாமல், அரசியல் அதிகாரக் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தின் முன் முகம் கொடுக்கத் தயார் என்று குறிப்பிட்ட அவர்கள், புலனாய்வு நிறுவனங்களின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
