போதைப் பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்கத் தனது உயிரைப் பணயம் வைத்து, நகரும் வாகனத்தின் மீது ஏறித் துணிச்சலுடன் செயல்பட்ட முதல் நிலைக் காவலர் வேல்முருகனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சந்தேகத்திற்கிடமான வாகனத்தைக் காவலர் வேல்முருகன் மறித்துள்ளார்.
அப்போது குற்றவாளிகள் அவர் மீது வாகனத்தை மோதச் செய்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
தன்னைத் தற்காத்துக் கொண்டு குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க, வேல்முருகன் சமயோசிதமாக அந்த வாகனத்தின் மீது ஏறியுள்ளார்.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், வாகனத்தைச் சுற்றி வளைத்து ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர்.
ஆபத்தான சூழலிலும் கடமையுணர்வோடு செயல்பட்ட முதல் நிலைக் காவலர் வேல்முருகனின் வீரத்தைப் பாராட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
