ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இதயத்தில் ஒரு மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை தொடர்பாக 9 மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர உள்ளிட்ட முறைப்பாட்டுத் தரப்பு சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜராகி கருத்துகளை முன்வைத்தார்.
“, மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே ஜூன் 07ஆம் திகதி முதல் இன்று வரை 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேசிய வைத்தியசாலையின் இதயப் பிரிவுடன் இணைந்த அவசர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் சிகிச்சை பெற்றார்.
நாங்கள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரிய மருத்துவ அறிக்கை தற்போது 9 மருத்துவர்களின் கையொப்பங்களுடன் கிடைத்துள்ளது. அந்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே நான் இங்கு கருத்து தெரிவிக்கிறேன்.
சந்தேகநபரின் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசாங்க நிதியில் 40 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் கொலையாளிக்கு இப்படித்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
இதன்போது நீதவான் உடனடியாக,
“அவர் இன்னும் கொலையாளி அல்ல. அவர் ஒரு சந்தேகநபர் மட்டுமே” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரிய பின்னர் மீண்டும் கருத்துகளை முன்வைத்தார்.
“நீதிமன்றமே, பல் பிரச்சினை இருப்பதாகக் கூறி சந்தேகநபர் பற்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்கிறார். நாங்கள் நீதிமன்றத்தில் இந்த விடயங்களை முன்வைத்த பின்னர், நேற்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையின் பரிந்துரைகளில், தற்போது சந்தேகநபர் இதய நோய் மற்றும் மனநிலை ஆகிய இரு விடயங்களிலும் நிலையாக இருப்பதாகவும், பல் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் அவரை விடுவிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர் வரும் 28ஆம் திகதி வைத்தியசாலையில் மருத்துவக் குழு ஒன்று கூடி, இந்த சந்தேகநபரை தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து கலந்துரையாட உள்ளது.
28ஆம் திகதி வைத்தியசாலை தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவரை 28ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து விடுவித்து விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிந்தால், அவருடைய முழுப் பொறுப்பையும் ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த சந்தேகநபரை நாங்கள் சித்திரவதை செய்ய விரும்பவில்லை. அவருக்கு சட்டரீதியாக தண்டனை பெற்றுத்தருவதே எங்களுடைய நோக்கம். எவ்வாறாயினும், தற்போது கூட சந்தேகநபருக்கு இயற்கையிடமிருந்து தேவையான தண்டனை கிடைத்துக்கொண்டிருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
மேலும்,“நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சந்தேகநபருக்குச் சொந்தமான மடிக்கணினி மற்றும் தொலைபேசிகளின் கடவுச்சொற்களை வழங்குமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்தக் கடவுச்சொற்கள் வழங்கப்படவில்லை. தனக்கு கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என அவர் கூறுகிறார். விசாரணைகளுக்கு அந்தக் கடவுச்சொற்கள் அத்தியாவசியமானவை. ஆனால் இதுவரை அவை வழங்கப்படவில்லை” என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைத்தார்.
“நீதிமன்றமே, மருத்துவ அறிக்கையை நான் இதுவரை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் அது தொடர்பில் எதிர்காலத்தில் கருத்துகளை முன்வைக்க எதிர்பார்க்கிறேன்.
அடுத்து, எனது நண்பர் கடவுச்சொற்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பின்பற்றும் ஒரு நடைமுறை உள்ளது. அவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடவுச்சொற்களை மாற்றுவார்கள்.
வேறு ஒருவரின் கைகளில் கடவுச்சொற்கள் சிக்குவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பதில்லை.
கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னர்தான் சந்தேகநபரிடம் கடவுச்சொல் கோரப்படுகிறது. அவை தொடர்பாக அவர் பதிலளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,
“கடவுச்சொற்கள் தொடர்பாக வைத்தியசாலையிலும் அதற்கு வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என்றே அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, அவரது காரில் மடிக்கணினி ஒன்று இருந்தது. அது தனது மகளுடையது என அவர் கூறினார். மடிக்கணினியை வழங்காமல் தவிர்ப்பதற்கு சந்தேகநபர் முயற்சித்தார்.
அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள்.
அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை விரைவுபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு இந்த சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கிறேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ மீண்டும் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.
“இதுவரை விசாரணைகளை மேற்கொண்டும் எதையும் கண்டுபிடிக்க முடியாமல், தற்போது அரசியல்வாதிகளின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அந்த விடயத்தைச் செய்ய முயற்சிக்கின்றனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணையாளர்களின் இயலாமையே இதன் மூலம் வெளிப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கோட்டை நீதவான், இந்த வழக்கின் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 21ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, வழக்கு விசாரணை ஒக்டோபர் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
