நாமலுக்கு வீட்டுணவிற்கு அனுமதி - நேரில் சென்றழுத நாமலின் தாய்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுரனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.
நாமல் ராஜபக்ச தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இலஞ்சம் பெறப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாhமல் ராஜபக்சவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிடடது.
இதற்கமைய, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டுக்கு அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தினசரி மூன்று நபர்கள் அவரைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாமல் ராஜபக்சவின் தாயாரான சிரந்தி ராஜபக்ச இன்று (07) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று நாhமல் ராஜபக்சவின் நலன் தொடர்பில் விசாரித்ததாக தமிழ் பிளஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று முற்பகல் நாமல் ராஜபக்சவைப் பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தார்.
