பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து அறிந்துகொள்வதற்காகச் சுகாதார அமைச்சர் மருவத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவும் மருத்துவமனைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
சேதங்களை உடனடியாகப் கணக்கிடவும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், இந்த வெடிப்புச் சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இன்று (26) அதிகாலை 4:00 மணியளவில் மருத்துவமனையின் பிரதான சமையலறையில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர காயங்களுக்கு உள்ளான மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியத் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் அருகிலுள்ள பல கட்டடங்களுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மருத்துவமனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டபோதிலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதேவேளை, குறித்த மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளைப் பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.