ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிடமான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான், சபாநாயகர் ஜெகத் விக்கிரமரத்ன முன்னிலையில் பாராளுமன்றத்தில் இன்று (24) உறுதியுரை எடுத்துக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த எம்.எஸ். அப்துல் வாசித் (M.S. Abthul Wazeeth) தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் மூத்த முக்கியஸ்தர்களிடையே பகிர்ந்துகொள்ளும் உட்கட்சி உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற அப்துல் வாசித், சுமார் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாத கால சேவையின் பின்னர் ஒப்பந்தத்தின்படி தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் ஹபீப் றிபானின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்படி அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் ஒரு வருட காலப் பகுதிக்கு தேசியப்பட்டியல் உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.
.jpg)