யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப் பகுதியில் மலர் மாலை சாத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகின.
இதனையொட்டி நல்லூரில் உள்ள நினைவாலயப் பகுதியில் திலீபனின் உருவம் பொறித்த வெண்கலச் சிலை வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.
நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று யாழ்ப்பாணச் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு வாகனங்களில் அங்கு வந்து, வெண்கலச் சிலையை அப் பகுதியிலிருந்து பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸாரின் இந் நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இதனிடையே, சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மலர் மாலை வைக்கப்பட்டு, அப்பகுதி மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
