பந்தய புறாக்களுடன் நால்வர் கைது

 

புத்தளம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் செயற்படும் விசேட சுற்றிவளைப்புக் குழுவினரால், கல்பிட்டி கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, பணயம் வைத்து நடத்தப்படும் புறா பந்தயங்களுக்குப் பயன்படுத்துவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 200-க்கும் குறைவான புறாக்கள் இதன்போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கையின் போது, கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு படகு, அதன் இயந்திரம் மற்றும் டொல்பின் வகையைச் சேர்ந்த வெள்ளை நிற வான் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மூவர் கல்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புறாவின் மதிப்பு சுமார் 50,000 ரூபாவாகும் என்பதுடன், கைப்பற்றப்பட்ட மொத்தப் புறாக்களின் மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் ஒரு கோடி (100 இலட்சம்) ரூபாவாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment