முகநூல் பதிவொன்றின் காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை - கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாகத் தலையிடுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்' அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் அழைப்பாளர் உமா கரந்தகொல்ல இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேல்முறையீட்டைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்த ஒரு உழைப்பாளியான இந்த இளம் உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய உமா கரந்தகொல்ல, சவூதி வெளியுறவு அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
