அமெரிக்க ஃபெடரல் கடல்சார் ஆணையத்தின் தலைவர் இலங்கை வருகை

 

அமெரிக்க ஃபெடரல் கடல்சார் ஆணையத்தின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ராபர்ட் ஜே. ஹார்வெ ஆகியோர் இன்று (6) இலங்கை வருகை தருகின்றனர். 

தங்களது ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, இருவரும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களையும் கடல்சார் துறைத் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கொழும்பில் செப்டம்பர் 9 முதல் 11 வரை 'நம்மைச் சுற்றியுள்ள ஒரு உலகத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள 8வது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் டிபெல்லா சிறப்பு உரையாற்றவுள்ளார். 

மேலும், ஹார்வெ இந்த மாநாட்டில் ஒரு விவாத அமர்வில் பங்கேற்க உள்ளார்.

அமெரிக்க வணிகர்களையும் நுகர்வோரையும் இந்தோ-பசிபிக் பிராந்திய சந்தைகளுடன் இணைக்கும் கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகியவற்றில் அமெரிக்கா-இலங்கை இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

'கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்லும் கன்டெய்னர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகின் பிற பகுதிகளுக்குத் தொடர்ந்து பயணிக்கின்றன 

இது இந்தியப் பெருங்கடல் கடல்சார் போக்குவரத்தின் மையமாக இலங்கையின் முக்கியப் பங்கை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்தார்.

'டிபெல்லாவின் இந்தப் பயணம் அத்தகைய பங்கை அங்கீகரிப்பதோடு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்த அத்தியாவசிய வர்த்தகத்தை இடைவிடாமல் இயங்கச் செய்யும் மக்களுடனும் நிறுவனங்களுடனும் எங்களது ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

பாதுகாப்பான மற்றும் திறமையான கப்பல் போக்குவரத்து அமெரிக்க வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், ஒரு பிராந்திய மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்தி, இரு பொருளாதாரங்களின் வளமைக்கும் உறுதுணையாக அமைகிறது.'

கொழும்பு துறைமுகம் கடந்த வாரம் முதன்முறையாக சர்வதேச அளவில் முதல் 20 துறைமுகங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தது.

இது முக்கியமாக அதன் கப்பல் இடமாற்று நடவடிக்கைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகும். 

1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஆஊ என்பது, அமெரிக்காவின் சர்வதேச கடல்சார் போக்குவரத்து அமைப்பை ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான ஒரு சுயாதீனக் கூட்டாட்சி நிறுவனமாகும். 

இந்நிறுவனம் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான சர்வதேச கடல்சார் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்துத் துறையில் நியாயமற்ற அல்லது ஏமாற்று வேலைகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும் செயற்பட்டு வருகிறது.

Post a Comment