மருத்துவர்களின் அலட்சிய போக்கு குழந்தை பலி-இளம் தம்பதியினர் வெளியிட்ட தகவல்

 

அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரின் அலட்சியப் போக்கினால், தனது மனைவியின் கர்ப்பத்திலிருந்த குழந்தை உயிரிழந்ததாகக் கூறி கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் அனுராதபுரம் காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

 கெக்கிராவ  சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின்கீழ் இயங்கும் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு, மருத்துவக் குறிப்புகளின்படி பிரசவத்திற்கான சாத்தியமான திகதியாக கடந்த 17ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரசவ அறிகுறிகள் தென்படாததால், கடந்த 19ஆம் திகதி கெக்கிராவ  மருத்துவமனை மருத்துவரை அவர் நாடியுள்ளார். 

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையைத் தொடர்ந்து, பிரசவத்திற்காக உடனடியாக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமாறு அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 20ஆம் திகதி அவர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், அங்கு விடுதிக்கு (Ward) பொறுப்பாக இருந்த மருத்துவர் பிரசவத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார்.

பின்னர் கடந்த 21ஆம் திகதி அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். 

ஓகஸ்ட் 25ஆம் திகதி குழந்தையின் அசைவுகள் தெரியாததால், அவர் கெக்கிராவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலதிக சிகிச்சைக்காக அவர் மீண்டும் அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பரிசோதனையின் போது கர்ப்பத்திலிருந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி குழந்தை வெளியே எடுக்கப்பட்டதுடன், தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி நெருக்கியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே பிரசவம் பார்க்கப்பட்டிருந்தால் இந்தச் சோகத்தைத் தடுத்திருக்கலாம் எனத் தாய் குற்றம் சாட்டுகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 28ஆம் திகதி அனுராதபுரம் காவல்துறையிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இதில் மருத்துவ அலட்சியம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நியாயமான விசாரணை நடத்தி, தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அத்தம்பதியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment