நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு அருகிலுள்ள அபாயகரமான வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா (Ditwah) சூறாவளியின் தாக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதி சேதமடைந்து தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முதலாவது விபத்தில், நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக சுமைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் நான்கு வாகனங்கள் பலத்த சேதமடைந்த போதிலும், அவற்றில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இரண்டாவது விபத்தில், ஹக்கல தாவரவியல் பூங்கா அருகே வீதியோரமாக நடந்து சென்ற 46 வயதுடைய நபர் ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (02) மாலை அதே பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் காரொன்றும் மோதி மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்துகளில் சிலர் உடல் உறுப்புகளையும் இழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக விபத்துகள் இடம்பெற்று வரும் நிலையில், நிலச்சரிவினால் சேதமடைந்து தாழிறங்கியுள்ள வீதியை அகலப்படுத்துவதுடன், குன்றும் குழியுமாக காணப்படும் பகுதிகளை உடனடியாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, குறுகிய வீதி காரணமாக எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு இடமளிப்பதற்குக்கூட பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், இதற்கு முன்னரும் இப்பகுதியில் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ச்சியான விபத்துகளால் பிரதேச மக்கள் அச்சத்துடனும், கவலையுடனும் இருப்பதாகவும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
