13 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக, அவரின் சித்தப்பாவான 35 வயதுடைய கனகரெத்தினம் ஜெயானந்தம் (அல்லது சிவானந்தம்) என்பவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (18) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி குறித்த 13 வயது சிறுமியை அவரது சித்தப்பாவான கனகரெத்தினம் ஜெயானந்தம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

தண்டனைச் சட்டக்கோவை 354-ன் கீழ்: சிறுமியை கடத்திச் சென்றமை / கவர்ந்து கொண்டு சென்றமை

தண்டனைச் சட்டக்கோவை 364-ன் கீழ்: பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை

ஆகிய இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் பி. தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி வாதாடினர்.

விசாரணைகளின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என நீதிமன்றத்தினால் இனங்காணப்பட்டு, அவருக்கான தண்டனை விவரங்கள் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டன.

முதலாவது குற்றம் (கடத்திச் சென்றமை): 2 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபா அபராதம்.

இரண்டாவது குற்றம் (பாலியல் துஷ்பிரயோகம்): 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபா அபராதம்.

 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment