சாரதிகளுக்கு புதிய குறைப்புப் புள்ளி முறை! ஒக்டோபர் 1 முதல் 6 மாதங்கள் சோதனை

இலங்கையில் வீதி விபத்துகளைக் குறைத்து பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு "சாரதி குறைப்புப் புள்ளி முறைமை" (Demerit Points System) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கொஸ்வத்தையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. 

நாட்டில் ஆண்டொன்றுக்கு 2,750-க்கும் மேற்பட்டோர் விபத்துகளால் உயிரிழப்பதைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இப்புதிய திட்டத்தின் முன்னோடி நடவடிக்கை 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்குச் செயற்படுத்தப்படும். இந்த அவகாசம் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய முறைமைக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் வழங்கப்படுகிறது.

இலங்கை பொலிஸ், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், Lanka Pay உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன. 

இதற்கு இணையான Gov-Pay ஆன்லைன் அபராதக் கொடுப்பனவு முறைமையும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் என்பது வெறும் உரிமையல்ல, அது ஒரு பாரிய பொறுப்பு எனக் குறிப்பிட்ட அமைச்சர், 2027 மார்ச் மாதம் முதல் 33 வகையான வீதிமீறல்களுக்காக இக்குறைப்புப் புள்ளி முறைமை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக முழுமையாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment