ஏறாவூர் 05ஆம் குறிச்சி மற்றும் ஆற்றை அண்டிய பகுதிகளில் ஏறாவூர் நகரசபையினால் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், குப்பைகள் கொட்டப்படுவதால் மக்கள் சுகாதாரச் சீர்கேடுகளைச் சந்திப்பதுடன், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் களப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சவுக்கடி மற்றும் மாவடிவேம்பில் பொதுத் தேவைகளுக்கான காணி ஒதுக்கீடுகளை துரிதப்படுத்துமாறும், சித்தாண்டி விளையாட்டு மைதானத்தை தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், முந்தனையாற்றுப் படுகையில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டதுடன், மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வைப் பெற மீண்டும் வழக்குத் தொடர அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
