கள்ளக்காதலுக்காக கணவனை மனைவி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் கணவரே தனது மனைவிக்கும் அவரது காதலருக்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
உத்தரபிரதேசம், *சாண்ட் கபீர் நகர்* மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவரை விட 13 வயது குறைந்த இளைஞருடன் மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கணவர் கோபப்படாமல் வித்தியாசமான முடிவை எடுத்தார்.
கிராமத்தில் உள்ள கோவிலில் தனது மனைவிக்கும் அந்த இளைஞருக்கும் தானே முன்னின்று திருமணம் செய்து வைத்தார். கணவர் முன்னிலையிலேயே காதலர் மனைவிக்கு குங்குமப்பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
இந்த திருமண காட்சிகள் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
*கணவர் கூறியது என்ன?*
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கணவர்,
*“எனக்கு பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் அடைபட்டு சாக விருப்பம் இல்லை.. நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்”* என கூறியுள்ளார்.
சமீப காலங்களில் கள்ளக்காதல் விவகாரங்களில் கணவர்கள் கொலை செய்யப்படும் செய்திகள் அதிகரித்து வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.
*சமூக வலைதள எதிர்வினை*
இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் "முதிர்ச்சியான முடிவு" என பாராட்ட, மற்றும் சிலர் "குடும்பம், 5 பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது அந்த பெண்ணும் அவரது காதலரும் புது வாழ்கையை தொடங்கியுள்ளதாக தகவல்.
இது குடும்ப உறவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
