அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க விசேட அபிவிருத்தி நிதியம் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணையை நான் முன்வைத்ததற்குப் பின்னால் ஒரு தெளிவான நோக்கம் இருக்கிறது. எமது நாட்டில் காணப்படும் வறுமை மற்றும் பிராந்திய மட்டத்திலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்பில் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களும் ஒரே விதமான பொருளாதார, சமூக மற்றும் அபிவிருத்தி நிலைமையில் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்துவமான பிரச்சினைகளும் தேவைகளும் காணப்படுகின்றன. எனவே, மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக வட மாகாணம், கிழக்கு மாகாணம், மொனராகலை மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டம் போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் பல தசாப்தங்களாக பல்வேறு காரணங்களால் கடுமையான பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. நீண்டகாலமாக நிலவிய சிவில் முரண்பாடுகளின் தாக்கங்களும், வரலாற்று ரீதியான புறக்கணிப்புகளும் இந்தப் பிராந்தியங்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியினால், ஏற்கனவே பின்தங்கிய நிலையில் காணப்படும் இந்தப் பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது பாரபட்சமான சுமைகள் மேலும் திணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஏற்கனவே காணப்பட்ட பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளன.
எனவே, பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ள இந்தப் பிரதேசங்களில் ஒப்புரவுமிக்க வளர்ச்சி, நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் பெண்களின் சமூக–பொருளாதார வலுவூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு தனியான தேசிய முன்னெடுப்பு அவசியமாகிறது.
இந்த விடயத்தை கருத்தில் கொண்டுதான், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக தனியானதொரு தேசிய விசேட அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற பிரேரணையை நான் பாராளுமன்றத்தில் முன்வைத்தேன்.
இங்கு நான் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திச் செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றை விமர்சிப்பதும் எமது நோக்கம் அல்ல. அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
நாங்கள் கோருவது, ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்பதையே.
அதேபோன்று, ஒரு விசேட நிதியம் உருவாக்கப்பட்டால், எம்மால் மாத்திரமே சிறந்த முறையில் அனைத்தையும் செயற்படுத்த முடியும் என்றும் நாங்கள் குறிப்பிடவில்லை. இந்த நிதியம் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் ஒன்றல்ல. மாறாக, மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளை இலக்காகக் கொண்டு, அவற்றுக்கு மேலதிகமான வளங்களையும் முதலீடுகளையும் திரட்டி, திட்டமிட்ட முறையில் தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு வலுவான பொறிமுறையாகவே இந்த நிதியத்தை நான் முன்மொழிகிறேன்.
நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் அனைத்திற்கும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக மாத்திரம் தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை அல்ல. சில மாவட்டங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. சில பகுதிகள் மீன்பிடி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. சில பகுதிகளில் தொழில் வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இன்னும் சில பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
எனவே, மாவட்ட மட்டத்தில் பிரத்தியேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அடிப்படைப் பிரச்சினைகளைத் தெளிவாக இலக்காகக் கொண்டு ஒரு நிதியத்தை உருவாக்கி, அந்த நிதியை தேவையான இடங்களில் சரியான முறையில் பயன்படுத்தும்போது, பிரச்சினைகளுக்கு விரைவாகவும் வலுவாகவும் தீர்வுகளை வழங்க முடியும். அதனால்தான் இந்தப் பிரேரணையை நான் முன்வைத்தேன்.
இந்தப் பிரேரணையின் கீழ், 10+2 ஆண்டு காலப்பகுதியிலான நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக 250 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலக்காகக் கொண்டு நிதியத்தை உருவாக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடமிருந்தும், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்திப் பங்காளிகளிடமிருந்தும், தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும், மனிதாபிமானக் கொடையாளர்களிடமிருந்தும் கிடைக்கக்கூடிய பங்களிப்புகளைத் திரட்டி இந்த நிதியத்தை வலுப்படுத்த முடியும்.
இந்த நிதி உருவாக்கப்பட்டால், அதன் மூலம் விவசாயம், மீன்பிடி மற்றும் குடிசைக் கைத்தொழில் போன்ற துறைகளில் கிராமிய மக்களின் வாழ்வாதாரங்களை மீளப் புத்துயிர் பெறச் செய்ய முடியும். அதேவேளை, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பெண்களின் சமூக–பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்துவதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும்.
பல பிராந்தியங்களில் முறையாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது முடங்கிய நிலையில் காணப்படும் சொத்துக்களை மீளச் செயல்படுத்தி, அவற்றை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதும் இந்த முயற்சியின் ஒரு முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
அதேபோன்று, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் (SME) மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும். குறிப்பாக கிராமப்புறங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் வளர்ச்சியடைவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் ஏனைய வணிக ரீதியாக சாத்தியமான கூட்டுத் தொழில் முயற்சிகளில் முதலீடு செய்வதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் எதிர்காலத்தில் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இளைஞர்களின் திறன் அபிவிருத்திக்கும் இந்த நிதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர் யுவதிகளுக்கு கல்வி மற்றும் தொழில் திறன்களை வழங்குவதன் மூலம் அவர்களை வேலை வாய்ப்புகளுக்குத் தயார்படுத்துவதுடன், அவர்களின் திறமைகளை உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கவும் முடியும்.
அதேவேளை, உள்ளூர் திறனாற்றலைக் கட்டியெழுப்புவதற்காக முதலீடுகளில் காணப்படும் சாத்தியமான இடைவெளிகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். நிதி பயனுள்ள வகையிலும், வெளிப்படையான முறையிலும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.
இதற்காக தொழில்நுட்ப உதவி வசதி (Technical Assistance Facility – TAF) ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் திட்டங்களைத் தயாரிப்பது முதல் அவற்றை நடை முறைப்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் அதன் பயன்களை மதிப்பீடு செய்வது வரை தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியும்.
அபிவிருத்தி என்பது ஆண்களை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது. பெண்களின் பொருளாதார மற்றும் சமூக பங்கேற்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொருளாதாரச் செயற்பாடுகளிலும் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து, சகல முதலீட்டுத் துறைகளிலும் பால்நிலை உள்ளடக்கும்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நிதியம் வெறுமனே பணத்தை வழங்கும் ஒரு அமைப்பாக இருக்கக் கூடாது. இலங்கையின் பிராந்திய ரீதியான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி ஆகியவற்றுக்கான ஒரு அவசர தேசிய நடவடிக்கையாக இது அமைய வேண்டும்.
அதேவேளை, இந்த நிதியின் செயற்பாடுகள் அந்தந்த அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்தந்த பிராந்தியங்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரமும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
நிதியின் பயன்பாட்டில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்தப் பிராந்தியத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அதன் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பவை வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு நிதியத்தை ஸ்தாபிப்பதன் மூலம், பல ஆண்டுகளாக அபிவிருத்தி வாய்ப்புகளில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த முடியும். உள்ளூர் தொழில் முயற்சிகளை வளர்க்க முடியும். மேலும், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் காணப்படும் வளங்களை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுத்துவதோ அல்லது அதற்கு மாற்றாக வேறு ஒரு அமைப்பை உருவாக்குவதோ அல்ல. அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுடன் இணைந்து, நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிராந்திய மற்றும் மாவட்ட மட்டப் பிரச்சினைகளுக்கு வேகமானதும் இலக்குமுகமானதுமான தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும். இங்கு நான் இன்னொரு விடயத்தையும் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
இந்த விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட்டால், அதனால் எனக்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கோ எந்தவொரு தனிப்பட்ட இலாபமும் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறான எந்தவொரு எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது.
இந்தப் பிரேரணையை நான் முன்வைத்திருப்பது எனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொள்வதற்காகவும் அல்ல.
இந்த நிதியத்தின் பயனைப் பெற வேண்டியது நானோ அல்லது என்னைச் சார்ந்தவர்களோ அல்ல. குறித்த மாவட்டங்களிலும் பின்தங்கிய பிராந்தியங்களிலும் வாழும் மக்களே அதன் பயனைப் பெற வேண்டும்.
அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும். அவர்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். விவசாயம், மீன்பிடி மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சியடைய வேண்டும். இளைஞர்களுக்கு கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவடைய வேண்டும். நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் வளங்களும் சொத்துக்களும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதுவே இந்தப் பிரேரணையின் நோக்கம். எனவே, மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து, அவற்றுக்கான பிரத்தியேகமான தீர்வுகளை வழங்குவது இன்று அவசியமாகியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமையில், புதிய வரவு–செலவுத் திட்டம் ஒன்றை மாத்திரம் எதிர்பார்த்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நாம் காத்திருக்க முடியாது.
மாவட்ட மட்டத்தில் பிரத்தியேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பின்தங்கிய பிராந்தியங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அபிவிருத்திப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நாங்கள் விமர்சிக்கவில்லை. அந்த அபிவிருத்திப் பணிகள் மக்களை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்பதையே நாங்கள் கோருகிறோம்.
அதற்காகத்தான் இந்த விசேட அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இது எனக்கான பிரேரணை அல்ல.
இது என்னைச் சார்ந்தவர்களுக்கான பிரேரணை அல்ல. இது பின்தங்கிய மாவட்டங்களின் மக்களுக்கான பிரேரணை. இது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கான பிரேரணை. இது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரேரணை. இது சமமான அபிவிருத்திக்கான பிரேரணை.
இந்த நோக்கத்துடனேயே நான் இந்த தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். இந்தப் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
