இந்தியாவின் பிரபல நடிகரும் மேடை நாடகக் கலைஞருமான ராகேஷ் பேடியின் ‘Massage’ தனிநபர் நாடக நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் Blacktown Bowman Hall-இல் பெரும் பார்வையாளர் பங்கேற்புடன் நடைபெற்றது.
Fame Events, Friends World TV மற்றும் New Horizon Event இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சுமார் 750 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள், சமூகப் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, தயாரிப்பாளரும் நடிகருமான Shelvin Das மற்றும் Varun Tiwari ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அரங்கில் எழுந்த பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் இருவரும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்த் திரைப்படச் சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) சார்பில் அதன் இணை ஆரம்பகர்த்தாக்களான இரவீ ஆனந்தராஜா மற்றும் Shelvin Das ஆகியோருடன், அமைப்பின் உறுப்பினரும் நடிகை மற்றும் மொடல் அழகியுமான சுஜித்தா சுகுணனும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
திரைப்படம் மற்றும் கலை சார்ந்த பல்வேறு சமூகங்களை ஒரே மேடையில் இணைக்கும் நிகழ்வாகவும் ‘Massage’ அமைந்தது. நிகழ்வின் வெற்றிக்காக பங்களித்த 20-க்கும் மேற்பட்ட அனுசரணையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் ராகேஷ் பேடியால் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம் நிதி சேகரிப்பு முயற்சிக்கும் பங்களித்தது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகத் துறைகளில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ள ராகேஷ் பேடி, நகைச்சுவையுடன் மனித வாழ்க்கையின் உணர்வுகளையும் இணைத்து ‘Massage’ நிகழ்ச்சியை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றார்.
ஆஸ்திரேலியாவில் பல்வேறு மொழி மற்றும் கலாசார பின்னணிகளைச் சேர்ந்த திரைத்துறையினருடன் தொடர்புகளை உருவாக்கி வரும் TFAA-விற்கும் இந்த நிகழ்வு மற்றுமொரு சந்திப்பாக அமைந்தது.








