பளை வனப்பகுதியில் LTTE பயங்கரவாத முகாம் ஒன்று இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த பகுதியில் அவ்வாறான முகாம் எதுவும் இல்லை என கூறினார்.
விசாரணைகளின் படி ஒருவர் அந்த வனப்பகுதியின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக துப்புரவு செய்து 3 மாடி கட்டிடம் கட்டி, அப்பகுதி மக்களுடன் இணைந்து ஆடை தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எனினும் வனப்பகுதியை சட்டவிரோதமாக அழித்த குற்றத்திற்காக அந்த நபருக்கு எதிராக 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்
பளை வனப்பகுதியில் LTTE முகாம் என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. கிளிநொச்சி அக்ராயன்குளம் பொலிஸ் பிரிவின் கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள முக்கன்பன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த இடம் 1919 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் இங்கு சட்டவிரோத மரம் வெட்டு மற்றும் நிலம் துப்புரவு பற்றி தகவல்கள் வந்தன. 2026 ஜனவரியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டதாக தகவல் கிடைத்தது. தற்போது அங்கு 4 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன.
இதன் உரிமையாளர் தியாகராசா குணதீபன் முதலில் 10 ஏக்கர் பின்னர் 20 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக துப்புரவு செய்து கற்றாழை மற்றும் காய்கறி பயிரிட்டுள்ளார். 2026 பெப்ரவரி 6 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் அந்த நிலத்திற்குள் நுழைய தடை விதித்தது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2026 ஜூலை 24 அன்று வன அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்த குற்றத்திற்காக உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டது. அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வைத்தே LTTE முகாம் என்ற போலி செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஆடை உற்பத்தி நிலையம் ஒன்று கிராம மக்களுடன் நடத்தப்படுவதாகவும், அது பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது.
போலி பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராகவும் தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
