புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊடகவியலாளர் சந்திப்பு

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (24)  நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால், உப தலைவர் பொறியியலாளர் பியல் ஹென்னாயக்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் காஞ்சன சிறிவர்தன மற்றும் கட்டணங்கள் மற்றும் பொருளாதார விவகாரப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஹசங்க கம்புருகமுவ ஆகியோர் கலந்துகொண்டு புதிய தீர்மானங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டனர்.

இலங்கையின் இலங்கை மின்சாரச் சட்டம் 2024 மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மற்றும் பேட்டரி மின் சேமிப்பு கட்டமைப்புக்கான (BESS) புதிய மின் கொள்முதல் கட்டண வீதங்கள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து உத்தியோகபூர்வ விவரங்கள் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன. நாட்டில் ஏற்படக்கூடிய மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டவரைபாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் K. P. L. சந்திரலால், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னரே அடிப்படை ஊட்டக் கட்டணங்கள் (Feed-in Tariffs) தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பயன்பாட்டு மட்டங்களுக்கு ஏற்ப இக்கட்டணங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், எல்நினோ (El Niño) காலநிலைத் தாக்கம் காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளதுடன் நீர்மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், எல்நினோ தாக்கத்தை முன்னிட்டு மின் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

புதிய கட்டண நிர்ணயங்களின்படி, சிறிய நீர்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மாற்றமில்லாக் பகுதியாக (Non-escalable) அலகு ஒன்றுக்கு 30.37 ரூபாயும், காற்றாலை மின்சாரத்திற்கு 20.80 ரூபாயும், தரைவழி சூரிய மின் திட்டங்களுக்கு 18.00 ரூபாயும், மிதக்கும் சூரிய மின் திட்டங்களுக்கு 23.58 ரூபாயும் அடிப்படை ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நகரத் திடக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக 41.72 ரூபாய் மாற்றமில்லாக் கட்டணமாக வழங்க ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர் ஹசங்க கம்புருகமுவ, புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண முறைகள் குறித்து விரிவாக விளக்கியதுடன், நுகர்வோரின் கூரைகளில் பொருத்தப்படும் சூரிய மின்தகடுகளுக்கான (Rooftop Solar) கட்டணங்களை விவரித்தார். இதன்படி, 10kW வரையிலான கட்டமைப்புகளுக்கு அலகு ஒன்றுக்கு 23.11 ரூபாயும், 10kW முதல் 40kW வரையிலான திட்டங்களுக்கு 19.15 ரூபாயும், 40kW முதல் 250kW வரை 17.11 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. 250kW முதல் 1000kW வரையிலான திறன் கொண்ட பேட்டரி சேமிப்புடன் கூடிய சூரிய மின் திட்டங்களில், முன்னுரிமை விநியோக நேரங்களின் போது முதல் 15 ஆண்டுகளுக்கு அலகு ஒன்றுக்கு 45.53 ரூபாய் வரை உயர் கட்டணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 250 kW-க்கும் குறைவான திறன் கொண்ட மின்கலன்களுக்கான (Batteries) வரிகளை விலக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டடதுடன், தேசிய மின் வலையமைப்பிற்கு மின்சாரத்தை வழங்காமல் நுகர்வோர் தமது சொந்த வீடுகளிலேயே சூரிய மின் அமைப்பைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் லெக்கோ (LECO) நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனுடன் பல முக்கிய சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் மின் பற்றாக்குறையைத் தடுத்து, உச்ச தேவையைத் தடையின்றி பூர்த்தி செய்வதற்காக 2027 மார்ச் மாதத்திற்குள் குறைந்தபட்சம் 450MW திறன் கொண்ட BESS உடன் கூடிய சூரிய மின் திட்டங்கள் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என தேசிய மின் அமைப்பு இயக்குநருக்கு (NSO) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி சேமிப்பு விநியோகக் கட்டமைப்புகளுக்கான நிலையான மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் (SPPA) 15 வருட காலப் பகுதிக்கு செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், 100 kW அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அனைத்துக் கூரைவழி மற்றும் பேட்டரி சேமிப்பு மின் திட்டங்களும் புதிய மின்சார விதிமுறைகளின் கீழ் உற்பத்தி அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

2026 ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த ஒழுங்குமுறை சட்டக்கோவையின் கீழ், மின்வலையமைப்புக் குறியீடு (Grid Code) மற்றும் மின்பகிர்மானக் குறியீடு (Distribution Code) விதிகளுக்கு அமைவாகவே அனைத்து நிறுவனங்களும் மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







Post a Comment