டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் லலித் கன்னங்கார எனப்படும் 'பஸ் லலித்' நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (25) அதிகாலை 05.20 மணிக்கு துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -226 விமானம் மூலம் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசேட அதிகாரிகளால் இவ்வாறு அழைத்து வரப்பட்ட அவரிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
'பஸ் லலித்' என்பவருக்கு எதிராக கொலைகள், குற்றங்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்குடன் தொடர்புடைய சிவப்பு அறிக்கை, மேல் மாகாண தெற்கு குற்றத் பிரிவினரால் பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2021.09.20 அன்று நெலுந்துடுவவைச் சேர்ந்த நபரொருவரின் வீட்டிற்குச் சென்று சுட்டுப் படுகாயமடையச் செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022.10.16 அன்று மூன்று நபர்களை வெட்டிபடுகாயப்படுத்தியமை தொடர்பிலும் 'பஸ் லலித்திற்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
