தாதியர்களின் சீருடை விவகாரம் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துகிறது: நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

இலங்கையில் முஸ்லிம் பெண் தாதியர்களின் சீருடை ஆடை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சை தேவையற்ற ஒரு விசமத்தனமான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிமாரா அலி எழுதிய சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், சிறுவர்களுக்காக கதைகள் மற்றும் கவிதைகளை எழுதுவது சாதாரண விஷயமல்ல என்றும், பாரதியார், கண்ணதாசன் போன்ற பெரும் கவிஞர்கள் சாதித்த இத்துறையில், எழுத்தாளர் சிமாரா அலி மேற்கொண்டிருக்கும் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நாட்டின் சமகால அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்துப் பேசிய ரவூப் ஹக்கீம், முஸ்லிம் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே தாதியர் போன்ற துறைகளில் பணிக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.

 இத்தகைய சூழலில், தாதியர் சீருடையில் காதுகளைத் திறந்து வைக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

ஹிஜாப் அணிந்தவாறே ஸ்டெதாஸ்கோப் கருவியை  பயன்படுத்தி திறம்படச் பணியாற்றும் பல பெண் மருத்துவர்கள் இருக்கும் நிலையில், இத்தகைய ஆடைக்கட்டுப்பாட்டுச் சர்ச்சைகள் தேவையற்ற முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு தகுந்த தீர்வினை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தேவையற்ற சமூக முரண்பாடுகளைத் தவிர்த்து, இதற்கான பரிகாரத்தை அரசு விரைவில் தரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Post a Comment