கொழும்பு:
இலங்கைத் திருநாட்டின் தலைநகரான கொழும்பு, கொம்பனித்தெருவில் எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலிக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் வருடாந்த பிரம்மோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர்த் திருவிழா இன்று (07-08-2026) வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறுகின்றது.
கடந்த ஜூலை 29 ஆம் திகதி உத்தராட நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) துவங்கிய இப் பிரம்மோற்சவத்தில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகங்கள், வசந்த மண்டப பூஜைகளுடன் சுவாமி பல்வேறு வாகனங்களில் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்றைய தினம் சப்பரத் திருவிழா சிறப்பாக நிறைவுற்ற நிலையில், இன்று கார்த்திகை சுபதினத்தை முன்னிட்டு காலை ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராய் அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான தங்கத்தேரில் எழுந்தருளி வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிக்கின்றார்.
இன்றைய தங்கத்தேர் பவனியைத் தொடர்ந்து, நாளை (08-08-2026) சனிக்கிழமை காலை 09.00 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அதனைத் தொடர்ந்து இரவு 07.00 மணிக்குத் துவஜாஅவரோகணம் எனும் கொடியிறக்கம் மற்றும் சண்டேஸ்வரர் உற்சவமும் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஹோற்சவ பிராயச்சித்த அபிஷேகமும் மாலை பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், ஆகஸ்ட் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வைரவர் மடையுடன் வருடாந்த மஹோற்சவ விழாக்கள் அனைத்தும் இனிதே நிறைவுபெறும்.
