இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 3 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் உயிர்சேதம் அல்லது பெரிய அளவில் சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இதற்கு முன்னர் 3 நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 1 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதேநேரம் இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று காலை 6.36 மணிக்கு பூமிக்கு 5 கிலோமீற்றர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை தவிர ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதிகாலை 4.29 மணிக்கு 4.0 ரிக்டர் அளவிலும் அதன் பின்னர் 4.41 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும் அங்கு நில அதிர்வு பதிவானது. அந்த நிலநடுக்கத்தாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
