பெற்றோர்களே குழந்தைகளிடம் நீங்கள் இதனை அவதானிக்கின்றீர்களா?

 

 இலங்கையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாட்டிற்கு மத்தியில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாதல், இணையவழிக் கேலி வதை (Cyberbullying) மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிறுவர்கள் ஆளாகுதல் போன்றவை தொடர்பாக தீவிர கவலைகள் எழுந்துள்ளன.

எனவே, சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனநல மருத்துவர் டாக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் அதிக நேரம் இணையத்தில் செலவிடுவதால் தூக்கமின்மை, கல்வி பாதிப்பு, சமூக உறவுகளில் விரிசல் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

மேலும், பணத்தின் மதிப்பை உணராமல் விளையாட்டுக்களுக்குள் பொருட்களை வாங்க (in-game purchases) பணம் செலவிடக்கூடும்.

சமூக வலைத்தளங்கள், மெசேஜிங் செயலிகள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மூலம் சிறுவர்கள் அவமானப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

 ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட விளம்பரங்கள் அதிகளவில் வருவதால், சிறு வயதுடனேயே இவ்வாறான பழக்கங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

 ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் எளிதாகக் கிடைப்பது இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.

குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்தும்போது அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தீங்கான நடத்தைகளைக் கண்டறியவும், தவிர்க்கவும், புகாரளிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

சிறுவர்கள் தகுதியற்ற உள்ளடக்கங்களை (inappropriate content) அணுகுவதைத் தடுக்கவும், இணையவழி துஷ்பிரயோகத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சூழலில், இணையத்தை அவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்ற பொது விழிப்புணர்வு, பொறுப்பான பெற்றோர் கண்காணிப்பு மற்றும் பலமான குழந்தை பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Post a Comment