தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக "எமது தலைமுறை கட்சியின்" தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மலையகத்திற்கு விஜயம் செய்து மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டித் திறந்து வைத்து, அன்பாக உரையாடி மேலதிக வீடுகளையும் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார். இவரைப் போன்ற ஒரு சிங்களக் தலைவரும் ஜனாதிபதியும் மலையகத்திற்குள் நுழைந்து வீடுகளைக் கட்டித் தருவது ஒரு அதிசயமான மற்றும் அற்புதமான செயலாகும் என்றும் அவர் பாராட்டினார்.
அதேவேளை, கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்திற்குச் சென்ற தமிழ் பிரதிநிதிகள், ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்து பின்னர் எம்பிக்களான பின் 'ராஜபோக' வாழ்க்கை வாழ்ந்தார்களே தவிர மக்களைப் பற்றி சிந்திக்கவோ கவனிக்கவோ இல்லை என அவர் குற்றம்சாட்டினார். ஆறுமுகன் தொண்டமான், மனோ கணேசன், திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த தலைவர்கள் அல்ல; அவர்கள் வெறும் தரகர்கள் என்றும் அவர் சாட்டினார்.
தமிழ் சமுதாயம் இத்தனை காலம் வளர்ச்சியடையாமல் குன்றிப் போனதற்கு இத்தகைய தமிழ் தலைவர்களும், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுமே காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், இனிவரும் காலங்களில் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட, யாரையெல்லாம் ஒதுக்க வேண்டும் என்று மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, வயது முதிர்ந்தவர்களையும், வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் திறமையில்லாதவர்களையும் அரசியலில் இருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மேலும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் 50 சதவீதம் உயரும் எனத் தெரிவித்த அவர், நல்ல தலைவராக கடவுளால் கொடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை மக்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
