முன்னறிவிப்பின்றி மின்தடை: பெரும் சிரமங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள்
மன்னார் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதனால் மின் நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மின் தடை காரணமாக நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மின் நுகர்வோரின் மின் உபகரணங்கள் சேதமடைவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மின்தடை தொடர்பில் வினவும் பட்சத்தில், மின்சார சபை ஊழியர்களோ அதிகாரிகளோ உரிய பதிலை வழங்க மறுப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பல்வேறு வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் இயங்குவதால், அந்நிறுவனங்களுக்கான அதிக மின் தேவை காரணமாகப் பொதுமக்களுக்கான மின் விநியோகத்தில் தாக்கம் ஏற்படுகின்றதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
