நாடாளுமன்றத்தில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்களை மீளாய்வு செய்வதுடன், அப்பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கஷ்டப் பிரதேச கொடுப்பனவு முறையையும் மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
