நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு பொது நலனுக்காகவே-ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சங்கத்தினர் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்

சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த அனைத்து கருத்துகளுக்கும் செவிமடுத்த ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்ற கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்

நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றங்களால் மட்டும் நடைபெறுவதல்ல விசாரணைகள் வழக்கு தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் என அனைத்தும் இணைந்த ஒருங்கிணைந்த செயற்பாடு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

அந்த வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனித வளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்

அத்துடன் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்

மக்களுக்கு நீதி கிடைப்பதை இலகுபடுத்தும் நோக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன் நீதிமன்றங்களுக்கு தேவையான பௌதிக வசதிகளும் வழங்கப்படும் என்றார்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பதற்கான முடிவு எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காக கொண்டதல்ல மாறாக நாட்டின் பொது நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்



Post a Comment