மெகசின் சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு; போதைப்பொருட்களை வழங்கச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேஸ்லைன் வீதியில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவர் அருகே மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, நேற்று (08) மதியம் இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த இடத்தில் சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீச முற்பட்டவேளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் வசம் இருந்த 02 பொதிகளை பரிசோதனை செய்தபோது, 22 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஏஷ் போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி கம்மல்கள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைப்பேசிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன், பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
