Posts

அதிக சத்தத்திற்கு இனி ஆப்பு - இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை காவல் துறை புதிய கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினால், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறும் பட்சத்தில் அந்த சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் உத்தரவுகளுக்கு அமைவாக, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ் பொது தொல்லையாகக் கருதப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதியில்லை. 

இருப்பினும், சிறப்பு மத நிகழ்வுகள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்காகச் சட்டப்பூர்வமாக அனுமதி பெற முடியும்.

அனுமதி பெறப்பட்ட சந்தர்ப்பங்களில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:30 மணி வரையிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம்.

அனுமதி பெறப்பட்டிருந்தாலும், அந்தச் சத்தம் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பப்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி எண்களுக்கோ புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Post a Comment