பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரனைக்கு

 

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை, விஜேராம விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது 115 முதல் 118 வரையிலான சாட்சிகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், 117 ஆம் இலக்கச் சாட்சியிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

அதேவேளை, ஏனைய சாட்சிகள் இந்த வழக்குடன் நேரடியாகத் தொடர்பற்றவர்கள் எனக் கூறி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். அதற்கமைய, அடுத்த வழக்கு விசாரணையின் போது 117 ஆம் சாட்சியிடம் தொடர்ந்து சாட்சியமளிப்பு இடம்பெறவுள்ளதுடன், 4 ஆம் இலக்கச் சாட்சியையும் அன்றைய தினம் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கமைய இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஹோமாகம பகுதியில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Post a Comment