சஞ்ஜீவவின் உயிருக்காக பக்கோ சமனின் தாயை பழியெடுத்த நிழல் உலகம்

 

பூசா அதி பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிர்மல பிரசங்க என்ற பக்கோ சமன் என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தா தரப்பினர், கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே இந்தக் கொலையைச் செய்துள்ளதாகப் பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர்.

கெஹெல்பத்தர பத்மேயுடன் பக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரும் கணேமுல்லே சஞ்சீவையின் கொலைக்கு உதவி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், கஜ்ஜா மற்றும் அவரது இரு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் பக்கோ சமனுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், சுட்டுக் கொலையை நிகழ்த்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்தை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (13) காலை ஊருபொக்க பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய, உளஹிட்டியாய, பதலங்கல வத்த பகுதியில் நேற்று (12) மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்தச் சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூட்டுச் சம்பவம் சிசிடிவி கமறாவில் பதிவாகியுள்ளது.

9 மி.மீ ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் துப்பாக்கிதாரிகள் குறித்த பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 தோட்டாக்களைத் துளைத்துள்ளனர்.

அதன்பின்னர் துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பியோடியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Post a Comment