மனித இனம் முடிவுக்கு வருகிறதா-கணிக்கப்பட்ட ‘உலக அழிவு நாள்’!





உலக   மக்கள் தொகை கணக்கீடுகளின் அடிப்படையில் மனித இனம் நெருக்கடியால் அழியும் நாள் மிக அருகில் உள்ளதாக 1960-ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய ஆய்வுக் கட்டுரை வெளியீட்டின் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் ,மனித இனத்தின் அழிவு குறித்து தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.

ஆஸ்திரிய இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் (Heinz von Foerster) மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிட்ட கணிப்பின்படி,

“மனித இனம் பசியால் இறக்காது, மாறாக மக்கள் தொகை பெருக்கத்தின் நெருக்கடியால் (Squeezed to death) அழியும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2,000 ஆண்டுகால உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தையும், 24 வெவ்வேறு காலகட்ட தரவுகளையும் கணித சூத்திரங்களின் மூலம் பகுப்பாய்வு செய்து இந்த முடிவை ஃபோர்ஸ்டர் வெளியிட்டார்.

மக்கள் தொகை இரட்டிப்பாகும் கால இடைவெளி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மக்கள் தொகை எல்லையற்ற நிலையை எட்டி, பூமியில் இடநெருக்கடியை உருவாக்கும் என்றும், அதுவே மனித இனத்தின் ‘உலக அழிவு நாள்’ (Doomsday) என்றும் கணி கணிதவியல் முறையில் வாதிட்டார்.

இருப்பினும், தற்போதைய நவீன மக்கள் தொகை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தக் கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

1960-களில் உலக மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு 2.2% ஆக உச்சத்தில் இருந்த நிலையில், 2026-ல் இதன் வளர்ச்சி விகிதம் 0.84% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

மேலும், ஃபோர்ஸ்டரின் கணிதக் கோட்பாட்டைப் பின்னோக்கி இயக்கிப் பார்த்த போது, மனித இனம் 200 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்ற தவறான முடிவு கிடைத்ததால், அவரே தனது கணிப்பில் பிழைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.

தற்போது உலகின் மக்கள் தொகை சுமார் 8.2 பில்லியனாக இருக்கும் நிலையில், மக்கள் தொகை பெருக்கம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் ஃபோர்ஸ்டர் குறிப்பிட்ட ‘நெருக்கடி அழிவு’ ஏற்பட வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

எனினும், குறிப்பிட்ட அந்தத் தேதி நெருங்கி வருவதால், அறிவியலின் கணித மாதிரிகள் குறித்து இணையவாசிகள் மத்தியில் இது குறித்த சுவாரஸ்யமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Post a Comment