அரச அலுவலகங்கள் தொடர்பில் அநுர அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

செத்சிரிபாய மூன்றாம் கட்டக் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்: பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும் அரச அலுவலகங்கள்.

பத்தரமுல்லை செத்சிரிபாய வளாகத்தின் மூன்றாம் கட்டக் கட்டுமானப் பணிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் இரங்க குணசேகர மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதுடன், இப்புதிய கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை ‘மாகா இன்ஜினியரிங்’ நிறுவனம் பொறுப்பேற்று நடத்துகிறது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பழைய சுவர்களால் சூழப்பட்ட, இருள் சூழ்ந்த சிறைச்சாலைகள் போன்ற அமைப்பிலிருந்து அரச அலுவலகங்கள் வெளியேற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அலுவலகங்களின் அளவு என்பது அதிகாரிகளின் பதவியைக் காட்டுவதாக இருக்கக் கூடாது என்றும், ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் அரச நிறுவனங்கள் சாதாரண மக்களுக்குச் சொந்தமானவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இப்புதிய கட்டிடத்தின் பணிகள் நிறைவடையும் போது நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடும் என்பதால், கோப்புகளைச் சேமித்து வைப்பதற்கான பெரிய அலமாரிகளுக்குப் பதிலாக இக்கட்டிடம் ஒரு நவீன காகிதமற்ற மையமாகச் செயல்படும் எனத் தெரிவித்தார். 

வெவ்வேறு இடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களால் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் தீர்மானம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், போர்ட் சிட்டி முதல் மொறட்டுவை வரை மெரைன் டிரைவ் வீதியை நீடிப்பதற்கான திட்டமிடல்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும், காலி வீதியின் மேம்பாட்டுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், நாட்டின் வரி செலுத்தும் சாதாரண பொதுமக்களுக்குச் சிறந்த மற்றும் விரைவான சேவையை வழங்குவதே இந்த அனைத்து மாற்றங்களின் முதன்மை நோக்கமாகும் எனக் கூறினார்.

Post a Comment