எல்நினோ வானிலை காரணமாக இலங்கையில் ஏற்படக்கூடிய உணவு பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில் விவசாய அமைச்சு விசேட திட்டமொன்றை தயாரித்துள்ளது.
எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் உணவு தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காகவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, புதிய சாகுபடி திட்டமொன்றும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன் நீர் மேலாண்மைக்கும் நீர் வளங்களை சரியாக பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நீரை வீணாக்காமல் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுவதால் பெரிய மற்றும் சிறிய நீர்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் பயிர்களும் பெரிதும் சேதமடைந்துள்ளன. நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 74 நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு தற்போது 37 சதவீதமாக வீழ்சியடைந்துள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் இந்த வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
