பாடல் பெற்ற ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வரலாற்றை இரவோடு இரவாக மாற்ற தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட போதே ப.சத்தியலிங்கம் இந்த விடயத்தினைக் ஒருங்கிணைப்பு தெரியப்படுத்தினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.
அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இரவு நேரத்தில் இவ்வாறு செய்ய முடியும். இந்த ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன்
ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருள் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருக்கின்றது.
அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
