தேசிய லொத்தர் சபை ஊழல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
தேசிய லொத்தர் சபையின் நிதி மற்றும் ஊழியர்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்திற்கு நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (31) கைது செய்யப்பட்டார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டமொன்றிற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களை, அரசுப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல் தனது சொந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு பெரும் நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அவருக்கு ஏற்கனவே பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த போதிலும், அவர் ஆணைக்குழுவில் சமூகளிக்கவில்லை.
இதன் காரணமாக அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்றிருந்த நிலையில், அந்நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை.
பின்னர் தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வாக்குமூலம் அளிப்பதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, ஆணைக்குழு வழங்கிய அறிவித்தலுக்கு அமைவாக இன்றைய தினம் (31) காலை 8:15 மணியளவில் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். பல மணிநேர தீவிர விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவுக்குப் பிறகு, பிற்பகல் 1:40 மணியளவில் அதிகாரிகள் அவரை முறைப்படி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, உடனடியாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் கருத்துக்களைப் பரிசீலித்த நீதவான், அவரைப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேராவும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
