நாளை அதிகாலை 6 கோள்கள் அணிவகுப்பும் பெர்சீட்ஸ் எரிகல் மழை உச்சமும் இலங்கையில் அரிய வானியல் காட்சி

நாளை அதிகாலை 12 ஆம் திகதி பெர்சீட்ஸ் எரிகல் மழை வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில் ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவுள்ளதால் இலங்கை விண்வெளி ஆர்வலர்களுக்கு அரிய வானியல் நிகழ்வு கிடைக்கவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது

நாளை சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானில் புதன் செவ்வாய் வியாழன் சனி யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் தோன்றும்

இலங்கையில் இந்த அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு 60 முதல் 90 நிமிடங்கள் முன்னதாக அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை பார்வையிட முடியும்

செவ்வாய் மற்றும் சனியை எளிதாக அடையாளம் காண முடியும் புதன் மற்றும் வியாழன் அடிவானத்திற்கு அருகில் இருப்பதால் பார்ப்பது சற்று கடினம் யுரேனஸை இருநோக்கி பெருக்கியாலும் நெப்டியூனை தொலைநோக்கியாலும் பார்க்க முடியும்

வானியல் ஆர்வலர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு அடிவானம் தெளிவாக தெரியும் இடத்தை தேர்வு செய்யுமாறு மையம் அறிவுறுத்தியுள்ளது

அதேநேரம் ஜூலை 17 முதல் ஒகஸ்ட் 24 வரை நீடிக்கும் பெர்சீட்ஸ் எரிகல் மழையின் உச்சம் நாளை அதிகாலை இடம்பெறும் 133 வருடங்களுக்கு ஒருமுறை வரும் 109P Swift Tuttle வால்நட்சத்திரத்தின் எச்சங்களால் இந்த எரிகல் மழை உருவாகிறது

நாளை அமாவாசை என்பதால் இருண்ட வானம் எரிகற்களை பார்ப்பதற்கு சாதகமாக அமையும் தெளிவான வானிலை இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 100 எரிகற்கள் வரை தெரியலாம்

பெர்சீட்ஸ் எரிகல் மழையை பார்க்க நள்ளிரவுக்கு பின் வடகிழக்கு வானத்தை நோக்கி 20 முதல் 30 நிமிடங்கள் கண்களை இருட்டுக்கு பழக்க வேண்டும் எனவும் மையம் கூறியுள்ளது

கோள்கள் அணிவகுப்பும் எரிகல் மழையும் சேர்ந்து வரும் இந்த இரட்டை நிகழ்வு ஒகஸ்ட் 12 13 ஆம் திகதிகளில் இலங்கை வானியல் ஆர்வலர்களுக்கு அரிய விண்வெளி விருந்தாக அமையும்



Post a Comment