களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த விதம்
கடந்த 10ஆம் திகதி இரவு பெண் ஒருவர் பணி முடித்து பேருந்தில் இருந்து இறங்கி கணவருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, புலத்சிங்கல பிரதேசத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த கணவர் இளைஞர்களை எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த இளைஞர்கள் பெண்ணின் வீட்டு அருகில் வந்துள்ளனர். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் தம்பதியினர் இளைஞர்கள் மீது பெட்ரோல் போத்தலை வீசி தீ வைத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நிலை
தாக்குதலில் படுகாயமடைந்த 2 இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
இச்சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களின் 19 வயதுடைய சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் பெண் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புலத்சிங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
