ஒரே நாளில் 3 கோர விபத்துகள்! சிறுமி உட்பட மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வெடிதல்தீவு 10வது பிரிவு பைபாஸ் வீதியில் ஏழு வயது சிறுமி ஒருவர் துவிச்சக்கர வண்டி செலுத்திக்கொண்டிருந்த நிலையில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்தார்.

இந்த நிலையில், பல்லமடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

32 வயதுடைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரத்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெரகம பகுதியில் ஜீப் வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதனால் புஞ்சி இரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் எதிரே வந்த ஜீப் வண்டியும் மோதியதில், முச்சக்கர வண்டியைச் செலுத்திய பெண்ணும் பின்னால் பயணித்த சிறுவனும் படுகாயமடைந்து மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரத்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து இங்குருகொடை நோக்கிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று, பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்த பெண் மீது மோதியது.

கொழும்பு 15 ஐச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment