கடத்தப்பட்ட 26 வயது பெண் - நாரஹேன்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு!
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக அவசர பொலிஸ் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், நவால வீதியில் வீதித் தடை ஏற்படுத்தி நாரஹேன்பிட்டிய பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய கார் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்தபோதிலும், சாரதி காரை நிறுத்தாமல் வேகமாகச் செல்ல முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காரை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, காரையும் கடத்தப்பட்ட பெண்ணையும் வீதியிலேயே விட்டுவிட்டு சாரதி தப்பி ஓடியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய சந்தேக நபரைக் கைது செய்யத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
