மீண்டும் பாரிய நிலச்சரிவு-மண்ணோடு மண்ணாக புதைந்த பலர்

 

இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இன்று (07) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வயநாடு மாவட்டம் மெப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடியில், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களை இணைக்கும் 'அனக்கோம்பொயில் - மெப்பாடி' இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிகக் கடுமையான மழை காரணமாக, சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் பகுதியில் திடீரென இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன், இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF) அவசரப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 

சுரங்கப்பாதை அமைக்கும் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள் மற்றும் சில வீடுகள், வாகனங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதுவரை உள்ளூர் மக்களின் உதவியுடன் 5 பணியாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைதியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

எனினும், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

கடந்த 2024 ஆம் ஆண்டிலும் இதே வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment