யாழ்ப்பாணம், ஜூலை 31 – யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவல்களின் படி, சம்பவத்தன்று அவர் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்கு பனை வெட்டும் பணிக்காகச் சென்றிருந்தார். அப்போது கருக்குளவி கூட்டின் தாக்குதலுக்கு உள்ளாகி பல இடங்களில் கொட்டுக்காயங்களுக்கு ஆளானார்.
இதையடுத்து, அவரது மகன் உடனடியாக அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்தார். அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்காமல், அவர் நேற்று இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனையும் மரண விசாரணையும் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
