நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்: பொதுஜன பெரமுன தெரிவிப்பு

"சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே உள்ளனர். எனவே, அவர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்" என அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:

"அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான திசைகாட்டி  அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம், கடந்த கால சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர்கள் வெளியிட்ட மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஜனரஞ்சகமான கருத்துக்களாகும். 

திசைகாட்டி கட்சியினர் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில், ஏனைய தரப்பினர் நாட்டை ஆட்சி செய்தபோது, நாட்டில் நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் மிகவும் கவர்ச்சிகரமான கருத்துக்களை முன்வைத்தனர். 

பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்ற கருத்துக்களையே முன்வைக்க முயன்றனர். உண்மைத் தகவல்களையும், துல்லியமான தரவுகளையும் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, தங்களுக்கு சாதகமான முறையில் நாட்டின் சமூக, பொருளாதார நிகழ்வுகளை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்.

அவர்களின் அந்த பகுப்பாய்வுகள் மக்களுக்கு எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தது என்றால், இந்நாட்டு மக்கள் பெரும்பான்மையானோர் திசைகாட்டிக்கு வாக்களிக்காமல் இருப்பது ஒரு பாவம் என்று நினைக்கும் அளவுக்கு அந்த விமர்சனங்கள் மக்களை ஈர்த்தன. 

இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட போது, உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்த போது, உலகளாவிய தொற்றுநோயை நாடு எதிர்கொண்ட போது, விவசாயிகளின் பிரச்சினைகள் வீதிக்கு வந்த போது, ஏன்... ஒரு கிராமத்திற்குள் யானை புகுந்தபோது கூட அவர்களிடம் அதற்குரிய மிக அழகான அரசியல் பகுப்பாய்வு ஒன்று இருந்தது. அந்த பகுப்பாய்வுகளை ஒரு உண்மையான வேலைத்திட்டம் என்று நம்பியே, இந்த நாட்டின் மக்கள் அவர்களுக்கு ஆட்ச அதிகாரத்தை வழங்கினர்.

தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் உள்ளே ஏற்பட்டுள்ள மோதலைப் போன்றதொரு சம்பவம், கடந்த 2020 நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையிலும் ஏற்பட்டது. 

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் குறித்து அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திசாநாயக்க, 'சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே உள்ளனர், எனவே இந்த கைதிகளின் உயிர் பாதுகாப்பு மற்றும் அதன் பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். இவ்வாறான மோதல்களில் யாராவது உயிரிழந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்' என அன்று தெளிவாகக் கூறியிருந்தார்.

கௌரவ ஜனாதிபதி அவர்களே, உங்களது அந்த பழைய விளக்கத்தின்படியே, இந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் உயிர்களுக்கான முழுப் பொறுப்பையும் இப்போது உங்களது அரசாங்கமே ஏற்க வேண்டியிருக்கும். எனவே, இந்த பொறுப்பில் இருந்து தற்போதைய அரசாங்கத்தால் எந்த வகையிலும் தப்பித்துக்கொள்ள முடியாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment