தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.
இவர் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தனது மூத்த மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறுமியின் தாய் எலி காய்ச்சல் காரணமாகக் காலமானார். தாயின் மறைவுக்குப் பிறகு, தந்தையான சந்தேகநபர் இச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.
இச்சிறுமி மற்றொரு இளைஞருடன் காதல் தொடர்பைப் பேணி வந்ததால், ஆத்திரமடைந்த தந்தை அவரைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தனது தந்தை தன்னைத் துஷ்பிரயோகம் செய்த விபரத்தை வைத்தியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட வைத்தியசாலைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து தம்பகல்ல பொலிஸாருக்கு அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, சந்தேகநபர் இந்த மாதம் 15-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
