வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரச ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரும் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரும் கூட இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அரசு ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு ஒரு 'தேவதைக் கதைகள்' அடங்கிய புத்தகத்தையே வழங்கியது. அந்தப் புத்தகத்தில் வளமான நாடு, அழகான வாழ்க்கை போன்ற மிக அழகான கனவுகள் இருந்தன. அத்தகைய பொன்னான நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் உயரிய நிலையை அடைந்து நாடு பெரும் அபிவிருத்தியைக் காணும் என்றே கூறப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக இன்று அரச ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக 20 கிலோ அரிசியைக் கடனாகப் பெற வேண்டிய நிலையை அரசே உருவாக்கியுள்ளது. அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்கி அவர்களின் சேவையை அரசு சிறுமைப்படுத்துகின்றது.
நாட்டின் 80 வீதமான அரச ஊழியர்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்தே இந்த அரசுக்கு வாக்களித்திருந்த நிலையில், அவ்வாறான அரச ஊழியர்களை இவ்வாறு அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்குத் தேவை பிச்சை எடுக்கும் வகையிலான கொடுப்பனவுகளோ அல்லது கடன்களோ அல்ல, மாறாக தங்களது சேவைக்கான மரியாதையும் முறையான சம்பள உயர்வும் ஆகும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உயர்த்தப்படும் என அரசு அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியது. ஆனால், இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதே சம்பள உயர்வு பற்றிப் பேசப்படுவதால், இந்த ஜூலை மாதத்தில் இருந்தாவது அரச ஊழியர்களின் சம்பளத்தை ஆகக்குறைந்தது 15 ஆயிரம் ரூபாவினாலாவது உயர்த்த வேண்டும். திறைசேரி நிரம்பி வழியும் அளவுக்குப் பணம் இருப்பதாக அரசு கூறுமாயின், அதனை மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்.
அத்துடன், நெல் கிலோவொன்றை 150 ரூபாவுக்குக் கொள்வனவு செய்வதாகக் கூறி, விவசாயிகளை கோமணம் அணிவித்து கொழும்புக்கு வரவழைத்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இன்று விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர். அரசு அன்று எதிர்க்கட்சியில் இருந்து கூறிய வாக்குறுதிகள் இன்று அவர்களுக்கே பாரிய எதிரொலியாக மாறியுள்ளன.
எங்களது ஆட்சிக் காலத்தில் கொவிட் பெருந்தொற்று மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், அரச ஊழியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓரளவு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் விளைச்சலைத் தகுந்த விலைக்குக் கொள்வனவு செய்து அவர்களுக்கு எமது அரசு பலம் சேர்த்தது.
திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றால், விவசாயிகளிடம் 150 ரூபாவுக்கு நெல்லைக் கொள்வனவு செய்து, ஏழை மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டுமே தவிர, மக்களுக்கு முன்னால் விசித்திரக் கதைகளைக் கூறி விநோதம் காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்றார்.
