நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையரான நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்ட விதானகே என்பவருக்கு, முதிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்கும், மற்றொரு முதிய பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்கும் 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிறைஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றம் கடந்த மே மாதத்தில் இந்தத் தீர்ப்பை வழங்கிய நிலையில், அவரின் அடையாளத்தை வெளியிடத் தடை விதித்திருந்த நீதிமன்ற உத்தரவு நேற்று (06) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.Radio New Zealand (RNZ) வெளியிட்ட தகவலின்படி, அவர் பணியாற்றிய முதியோர் பராமரிப்பு நிலையத்தில் இரண்டு முதிய பெண்களை இலக்காகக் கொண்டு பாலியல் குற்றங்களை புரிந்ததாக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். எனினும், நீதிமன்ற உத்தரவின் காரணமாக அந்த பராமரிப்பு நிலையத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
தண்டனை வழங்கிய நீதிபதி ஜேன் பாரிஷ், உடல் மற்றும் மனநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த பெண்களுக்கு எதிராக, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்த பராமரிப்பாளர் இவ்வாறான குற்றங்களைச் செய்தது மிகக் கடுமையான நம்பிக்கைத் துரோகம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், 11 வயது சிறுமியிடம் தனது வாகனத்தை நிறுத்தி சிகரெட் மற்றும் பயணம் வழங்குவதாகக் கூறி வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்று வாகன இலக்கத்தை பதிவு செய்து தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளி தனது செயல்களுக்கு எந்தவித மனவருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும், தண்டனையின் மூன்றில் ஒரு பங்கை அனுபவித்த பின்னர் அவரை இலங்கைக்கு நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
