இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய, தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், இலகு தவணைக்கொடுப்பனவு முறையில் வீடுகளையும் காணிகளையும் வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் வாக்குறுதியளித்து, பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பாரியளவிலான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் சந்தேக நபர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ஆரம்பத்தில் வீடு மற்றும் காணியின் மொத்த மதிப்பில் 60 சதவீதத்தை முன்பணமாகப் பெற்றுள்ளார்.
பணத்தைப் பெற்ற பிறகு, வாக்குறுதியளித்தபடி எந்த வீடும் கட்டப்படவில்லை. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் பணத்தைத் திரும்பக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு சந்தேக நபரால் வழங்கப்பட்ட காசோலைகளும் வங்கியில் போதிய பணமின்றி நிராகரிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 புகார்களைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த மோசடியில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்ட மற்ற நபர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மிரிஹானா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று (28) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
