ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் (21) காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவு தீயில் எரிந்திருந்தன.
இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தில் பன்னிப்பிட்டியவை சேர்ந்த 55 வயதுடைய மரியோ எட்வர்ட், தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) , அட்டகலம்பன்ன பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், ஹட்டன் - மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், 26 வயதான வரதராஜன் தமயந்தியின் உடல் இன்று ( 23) ஆம் திகதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான வரதராஜன் தமயந்தியின் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், பெற்றோர் உள்ளடங்களாக ஆறு பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தந்தை தோட்டத்தொழிலாளி என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு நாட்கள் விடுப்பில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று ( 23) தோட்ட பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
